�
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நவம்பர் 28ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் தொடங்க உள்ளது. 27ஆம் தேதி தொடக்க நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஜெய்ஹிந்த் இந்தியா’ என்ற பாடலுக்கு ரஹ்மானும் பாலிவுட் நடிகர் ஷா ருக் கானும் நடனமாட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோவை ஏற்கெனவே ரஹ்மான் வெளியிட்டிருந்தார். அதில் நயன்தாராவும் இணைந்து நடித்திருந்தார். குல்ஸார் பாடல் வரிகளை எழுத, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இணையத்தில் புரொமோ வீடியோ நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ரஹ்மான் ரசிகர்களையும் தங்களுடன் இணைந்து நடனமாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் புரொமோ வீடியோவையும் இணைத்துள்ளார். அதில் உள்ள நடன அசைவுகளைப் பின்பற்றி ரசிகர்கள் நடனமாடி அதை வீடியோவாக பதிவு செய்து ரஹ்மானின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றவேண்டும். அதில் சிறப்பாக ஆடும் ஒருவரை ரஹ்மான் தேர்ந்தெடுப்பார். அவர்கள் நவம்பர் 27ஆம் தேதி ஒடிசாவின் கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின் போது ரஹ்மானுடனும் ஷா ருக் கானுடனும் இணைந்து நடனமாடுவர்.�,