அண்ணா, கலைஞர் வளர்த்த திமுகவில் சேருவதில் எந்தத் தவறும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞரின் நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5ஆம் தேதி பேரணி செல்லப்போவதாகவும், இதில் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்றும் கலைஞரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி அறிவித்திருந்தார். பேரணி குறித்து நேற்று மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனையைத் தொடர்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, “திமுகவில் தலைவர் உள்பட எந்தவொரு பதவிக்கும் நான் ஆசைப்பட்டது கிடையாது. தலைவர் இருக்கும்போதே பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. திமுகவில் தற்போது யாரைத் தலைவராக தேர்ந்தெடுப்பது என்பதை நான் வெளியில் இருந்து சொல்லக் கூடாது. இது தற்போது அவர்கள் கட்சி. அவர்கள் யாரைத் தேர்வு செய்கிறார்களோ அவர்தான் தலைவராக முடியும். பேரணி நடத்துவதால் என்னை திமுகவில் இணைப்பார்களா என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
திமுகவில் சேர்வதற்காக கதவைத் தட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? தாய்க் கழகம்தானே அது. அண்ணா, தலைவர் வளர்த்த கழகத்தில் சேருவதில் எந்தத் தவறும் கிடையாது. செப்டம்பர் 5ஆம் தேதி நடக்கும் பேரணியால் திமுகவுக்கு நிச்சயம் ஆபத்து இருக்கும். பேரணி மூலம் தமிழ்நாட்டு மக்கள் என்னை எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது விரைவில் தெரியும் என்று குறிப்பிட்ட அழகிரியிடம்,
உங்களைக் கட்சியில் சேர்க்காமல் தேர்தல்களை எதிர்கொண்டால் திமுகவின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “2014 முதல் நடந்த தேர்தல்களில் திமுகவின் வெற்றி, தோல்வி குறித்து உங்களுக்கு நன்றாகவே தெரியும். 2014 முதல் ஒரு தேர்தலில் கூட திமுக வெற்றிபெறவில்லை” என்று பதிலளித்தார்.
மேலும், “சென்னையில் ஒரு திருமணத்திற்கு தேதி கொடுத்திருந்த நிலையில், தலைவர் மறைந்து 30 நாள் முடியாததால் அதற்கே செல்லாதவர் தற்போது அவசர அவசரமாக தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளார்” என்றும் ஸ்டாலினை விமர்சித்தார்.
திமுக நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, நான் திமுகவில் இல்லை. எனவே திமுக கூட்டங்கள் குறித்து என்னிடம் கேட்க வேண்டாம் என்று தெரிவித்தார்.�,