சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரப்பப்பட்டதால் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் 79 நகைக் கடைகள் இருக்கின்றன. கல்யாண் ஜூவல்லர்ஸ் கடை தொடர்பாகச் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய காணொளி அந்நிறுவனத்தைப் பெரும் இழப்புக்கு உள்ளாக்கியுள்ளது. யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளிக் காட்சி ஒன்றில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் முறைகேடாகப் பதுக்கி வைத்திருந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றுவது போன்ற செய்தி பரப்பப்பட்டுள்ளது. இது இதர சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள நீதிமன்றத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் கேரளக் கிளை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கல்யாண் ஜூவல்லர்ஸின் போட்டி நிறுவனங்கள் வேண்டுமென்றே இதுபோன்ற போலியான செய்திகளைப் பரப்பி, தங்களது தொழிலை முடக்க முயற்சிப்பதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டில் உள்ள தங்களது கடை ஒன்றில் வழக்கமான சோதனை ஒன்று நடந்ததாகவும், அதைத் தவறாகப் பரப்பி வருகிறார்கள் எனவும் கல்யாண் ஜூவல்லர்ஸ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது. இதனால் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சோதனைக்காக சில மாதிரி நகைகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றதைத் தவறாகச் சித்தரித்து இவ்வாறு போலியான தகவல்களைப் பரப்பியுள்ளதாக கல்யாண் ஜூவல்லர்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.�,