Dதலைக்கவசம் உயிர்க்கவசம்!

Published On:

| By Balaji

ஒரு கப் காபி

சனிக்கிழமை வந்துவிட்டாலே ஏதோ ஒரு மகிழ்ச்சிதான். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை, அலுவலகத்துக்கு விடுமுறை. ஓய்வெடுக்கவும், நிறுத்தி வைத்திருந்த நமது சொந்த வேலைகளை முடிப்பதற்கும், நண்பர்களைச் சந்திப்பதற்கும் ஏற்ற நாள். சனிக்கிழமை இரவுகளில் சினிமாவுக்குச் செல்வதும் வழக்கம். அனைத்து வாரங்களிலும் இல்லாவிட்டாலும் நல்ல படங்கள் வரும்போது நானும் எனது சென்னை நண்பனும் அவனது பைக்கில் சினிமாவுக்குச் சென்றுவிடுவோம். நேற்றிரவு படத்துக்குக் கிளம்பிவிட்டோம்.

ரூமிலிருந்து தியேட்டருக்கு ஐந்து கிலோமீட்டர்தான். 10 மணிக்குப் படம். இங்கேயே 9.50 ஆகிவிட்டது. முன்பதிவு செய்துவிட்டதால் திட்டத்தைத் தள்ளிப்போடவும் மனமில்லை. அவசர அவசரமாகக் கிளம்பினோம். கிளம்பிய அவசரத்தில் ஹெல்மெட்டை எடுக்க மறந்துவிட்டான் நண்பன். நானும் கவனிக்கவில்லை. மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகுதான் நண்பன் தலையில் ஹெல்மெட் இல்லை என்பதைக் கவனித்தேன். உடனடியாக பைக்கை நிறுத்தும்படிக் கூறினேன். மீண்டும் அறைக்குச் சென்று எடுத்து வரலாம் என்று நான் கூறியதை நண்பன் ஏற்கவில்லை. இந்த வழித்தடத்தில் போலீஸ் இருக்க மாட்டாங்க; இவ்ளோ தூரம் வந்தாச்சு; வாடா பாத்துக்கலாம்” என்கிறான் நண்பன். நான் பத்திரிகையாளன் என்பதால் போலீஸிடம் மாட்டினால் சற்று சலுகை கிடைக்கும் என்பதும் அவனது எண்ணம்.

எனக்கு மனமில்லை. விடாப்பிடியாக அவனைத் திருப்பச் சொல்லி ரூமுக்குச் சென்று ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக் கொண்டு மீண்டும் புறப்பட்டோம். படம் தொடங்கி 10 நிமிடங்கள் கழித்துத்தான் நாங்கள் தியேட்டருக்குள் சென்றோம். நண்பனுக்கு என்மீது கோவம். படம் முடியும் வரையில் முனுமுனுத்துக்கொண்டிருந்தான். படம் முடிந்து வீடுதிரும்பியவுடன் அவனைச் சமாதானம் செய்தேன். ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி மரணித்த எனது கல்லூரித் தோழனின் நினைவு என்னைத் தொற்றிக் கொண்டது. அதுகுறித்து நண்பனிடம் பகிர்ந்து கொண்டேன்.

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் இளங்கலை கணிதப் பாடத்தில் என்னுடன் பயின்ற 51 பேரில் மனோகரனும் ஒருவன். பார்ப்பதற்கு மிகவும் சாந்தமாக இருக்கும் அவன் படிப்பில் கெட்டி. படிப்பு மட்டுமல்லாமல் கலை, விளையாட்டு என அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்தவன். கல்லூரியின் தொடக்கக் காலத்தில் அவனுடன் பழக வேண்டும்; நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் விரும்புவர். அதில் நானும் ஒருவன். கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டிகளில் அவன் வெறுங்கையோடு திரும்பியதே இல்லை. கிட்டத்தட்ட 20 முதல் பரிசுகளை அவன் வென்றுள்ளான். இப்படித் திறமைமிக்க அவன் நட்பு பாராட்டுவதிலும் சிறந்தவன்.

கல்லூரி முடிந்து திருச்சியில் அவனுக்கு வேலை கிடைத்தது. ஹெ.டி.எஃப்.சி. வங்கியில் துணை மேலாளர் பதவி. நல்ல சம்பளம் நல்ல குடும்பம் என்று நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவனது வாழ்க்கையில் திடீரென காலன் விளையாடினான். ஹெல்மெட் அணியாமல் சென்று பைக் விபத்தில் சிக்கிய அவன் மரணமடைந்துவிட்டான். அவனது இழப்பு பெரும் இழப்பு. ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் தெரிந்தவன்தான் அவன். இருப்பினும் அன்று அவன் உயிர் பிரிய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது போலும்.

இச்சம்பவம் நான் உட்பட எனது கல்லூரித் தோழர்கள் அனைவரையும் கடுமையாகப் பாதித்துவிட்டது. இப்போது ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. அவன் இப்போது எங்களோடு இல்லை. அவன் நினைவுகள் உள்ளன. அவனது நினைவுகளுடன் அவன் விட்டுச்சென்ற செய்தி மட்டுமே எஞ்சியுள்ளது, ஹெல்மெட் அணியாமல் சென்று உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று. பைக் பயணத்தை பெரும்பாலும் விரும்பாத நான், எனது நண்பர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பேன்.

“தலைக்கவசம் உயிர்க்கவசம்” என்பது உண்மைதான், கட்டாயமும்கூட. என் கல்லூரித் தோழனின் கதையைக் கேட்ட சென்னை நண்பன் சிறு துளிக் கண்ணீருடன் இனி ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவதில்லை என்று வாக்களித்திருக்கிறான். வாழ்க்கை ஓட்டத்தில் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நம்மை நாமேதான் காத்துக்கொள்ள வேண்டும்.

**-செந்தில் குமரன்**

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share