தனியார் விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு அந்நிறுவனங்களே தீர்வுகாண வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்திய விமானத் துறையில் சமீப காலமாகவே கடுமையான நெருக்கடியும் போட்டியும் நிலவி வருகிறது. விமான எரிபொருள் விலை உயர்வால் ஒருபுறம் நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்துவரும் நிலையில், மறுபுறம் அதிகப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகக் குறைந்த கட்டணத்தில் சிறப்புச் சலுகைகளை வழங்கி வருவதால் போதிய வருவாயை ஈட்ட முடியாமல் இந்நிறுவனங்கள் தவித்து வருகின்றன. பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து வந்ததால் அதன் பங்குகளை விற்றுத் தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வரிசையில் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் தங்களது தொழிலில் தொடர்ந்து இயங்க முடியாமல் தவித்து வருகின்றன.
அதிக இழப்புகளைச் சந்தித்து வருவதால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தனது ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில் தாமதித்து வருகிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் ஜெட் ஏர்வேஸ் இப்போது வருவாய் இழப்புகளைச் சந்தித்து வருவதால் சந்தையில் அதன் பங்குகளும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தனியார் விமான நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளையும், நெருக்கடியையும் தாங்களே சரிசெய்து கொள்ள வேண்டும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். *பிடிஐ* செய்தி நிறுவனத்துடனான ஒரு நேர்காணலில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் குறித்துக் கேட்டதற்கு, அது பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்துள்ளார்.
“அவர்களின் (ஜெட் ஏர்வேஸ்) நிலை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. தனியார் விமான நிறுவனங்கள் தங்களுக்கான பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். எங்களால் கொள்கை தொடர்பான உதவிகளை மட்டுமே விமானப் போக்குவரத்துத் துறை வாயிலாக வழங்க முடியும்” என்று சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.�,