டோக்லாம் எல்லையில் எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநிலம் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் அருகேயுள்ள டோக்லாம் பகுதி, யாருக்குச் சொந்தம் என்பதில் சர்ச்சை நிலவிவருகிறது. இதனால் கடந்த வருடம் ஜூன் மாதம் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் முகாம்களை அமைத்தபோது இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் இரு நாடுகளும் அங்கு படைகளைக் குவித்ததால், போர் பதற்றம் உருவாகியிருந்தது. இது தொடர்பாக, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், 73 நாள்களுக்குப் பிறகு இரு நாடுகளும் தங்களது படைகளை எல்லையிலிருந்து வாபஸ் பெற்றது. ஆனால், இந்தப் பகுதியை சீனா மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் தேசிய பாதுகாப்புத் துறை அகாடமிக்கான நுழைவுத் தேர்வை எழுதியுள்ள மாணவர்களை நேற்று சந்தித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பிராந்திய அமைதியை நிலைநிறுத்துவதில் இந்தியா உறுதியுடன் இருக்கிறது. டோக்லாம் எல்லையில் எத்தகைய நெருக்கடியான சூழலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது.
டோக்லாம் பகுதியில் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தங்களுக்கு உரிமை இருப்பதாகச் சீனா கூறிவரும் நிலையில், அந்நாட்டுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.�,