dஜி.கே.வாசனுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு!

public

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மீண்டும் காங்கிரஸ் இயக்கத்தில் இணைய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். தமாகாவை பாஜகவில் இணைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த அழைப்பை அழகிரி விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று (மே 10) அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்க முயற்சி நடப்பதாக சில நாளேடுகளில் செய்தி வெளிவந்துள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த முடிவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருக்கிற தொண்டர்கள் எவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. நீண்ட நெடுங்காலமாக பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோர் தலைமையில் செயல்பட்டவர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணி அமைப்பதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைப்பதை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் தான் தமிழ் மாநில காங்கிரஸ். அந்த வகையில் தி.மு.க.வோடு கூட்டணி அமைத்து மக்களவையில் 20 இடங்களிலும், சட்டமன்றத்தில் 39 இடங்களிலும் மக்கள் தலைவர் மூப்பனார் தலைமையில் வெற்றி வாகை சூடியதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். இதன்மூலம் மத்திய ஐக்கிய முன்னணி ஆட்சியில் அமைச்சர்களாக த.மா.கா. பங்கேற்றது. இதன்மூலம் தமிழகத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் பங்களிக்க முடிந்தது.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 20 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருசேர அன்னை சோனியா காந்தி முன்பு மக்கள் தலைவர் மூப்பனார் அணிவகுக்க செய்ததை குறிப்பிட விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியை விட்டு மக்கள் தலைவர் விலகினாலும் காங்கிரசுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டதில்லை. அவரது கனவில் கூட காங்கிரஸ் எதிர்ப்புணர்வு வந்தது கிடையாது. அந்தளவுக்கு காங்கிரஸ் கட்சி மீதும், நேரு பாரம்பரிய தலைமை மீதும் அளவற்ற பற்றும், நம்பிக்கையும் கொண்டவர் ஜி.கே. மூப்பனார்” என்று குறிப்பிட்டுள்ள அழகிரி தொடர்ந்து,

“1999 இல் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது மக்கள் தலைவர் மூப்பனாரை அன்னை சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்று தமிழ் மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. ப. சிதம்பரம், திரு. என். டென்னிஸ், திரு. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூவரது வாக்குகளையும் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து எதிர்த்து வாக்களித்து பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டதை இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் உணர்ந்து பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் தங்களது வாழ்க்கையை தொடங்கிய இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க.வில் இணைவது என்பது தற்கொலைக்கு சமம். எந்த இயக்கத்தோடு பல வருடங்களாக இரண்டறக் கலந்து உணர்வுபூர்வமாக பணியாற்றினோமோ, அந்த இயக்கத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறியிருந்தாலும் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. பா.ஜ.க.வில் சேருவது என்பதை உங்களாலே மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பெருந்தலைவர் காமராஜரை 1966 ஆம் ஆண்டு தலைநகர் தில்லியில் உயிரோடு எரிக்க முயன்ற வகுப்புவாத கும்பலின் வாரிசாக விளங்குகிற பா.ஜ.க.வோடு சேருவதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா ? 1999 இல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு காரணமாக இருந்த மூன்று வாக்குகளை அளித்து உதவிய மக்கள் தலைவர் மூப்பனார் வழிவந்த நீங்கள் பா.ஜ.க.வில் சேருவதை ஏற்றுக் கொள்வீர்களா ? தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை பா.ஜ..கவில் சேருவது என தவறான முடிவெடுத்தால் அந்த முடிவை காங்கிரஸ் உணர்வுள்ள இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். எதை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ, அதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியும். பா.ஜ.க.வில் இணைவது என்ற முடிவு அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகும்.

எனவே, நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற அனைவரையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில் உங்களை இருகரம் கூப்பி அன்போடு அழைக்கிறேன். இளம் தலைவர் ராகுல்காந்தியின் போர்ப்படையில் இணைய உடனடியாக வாருங்கள். உங்களுக்காக சத்தியமூர்த்தி பவனின் கதவுகள் திறந்திருக்கின்றன. இது உங்கள் தாய் வீடு. இங்கே வருவதற்கு உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம். உங்களை ஆதரிக்க, அரவணைக்க தமிழக காங்கிரஸ் தலைமை தயாராக இருக்கிறது. இனியும் தமிழ் மாநில காங்கிரசில் நீடிப்பதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. மே 23 ஆம் தேதிக்கு பிறகு மத்தியில் வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு, இளம் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி. அத்தகைய தேசிய நீரோட்டத்தில் இரண்டறக் கலக்க தமிழ் மாநில காங்கிரஸ் நண்பர்களே வாருங்கள், வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன்” என்று அழைப்பு விடுத்துள்ளார் அழகிரி.

.

.

**

மேலும் படிக்க

**

.

[அமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/05/10/27)

.

[டிஜிட்டல் திண்ணை: சசிகலா- எடப்பாடி: சமரச தூதர் யார்?](https://minnambalam.com/k/2019/05/09/80)

.

.

[காங்கிரஸுக்கு தூதுவிடும் தெலங்கானா முதல்வர்!](https://minnambalam.com/k/2019/05/09/48)

.

[சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி](https://minnambalam.com/k/2019/05/09/26)

.

[தேனி விவகாரம்: பன்னீர் பதில்!](https://minnambalam.com/k/2019/05/09/51)

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *