�மருத்துவர்களுக்கு ஆறு மாத சோனோகிராபி பயிற்சி நடத்தி சான்றிதழ் வழங்குமாறு மருத்துவ கல்வி இயக்குனர் பிறப்பித்த அரசாணையைச் செயல்படுத்த தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ கல்வி இயக்குனரகம், மருத்துவர்களுக்கு ஆறு மாத சோனோகிராபி பயிற்சி நடத்தி சான்றிதழ் வழங்குமாறு கடந்த ஜூன் 12ஆம் தேதி அரசாணை பிறப்பித்திருந்தது. இதுதொடர்பாக, மதுரை மாவட்டம், ஐயர்பங்களாவை சேர்ந்த மருத்துவர் ராஜகுமாரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ரேடியாலஜிஸ்ட்டுகளும், சோனாலாஜிஸ்டுகளும் ஒன்றல்ல என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி இருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்களுக்கு, சட்டவிரோதமாக மருத்துவ கல்வி இயக்குனர் பிறப்பித்த அரசாணையைத் தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ கல்வி இயக்குனர் ஜூன் 12ஆம் தேதி பிறப்பித்த அரசாணையைச் செயல்படுத்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.�,