கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விதித்திருந்த தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ளது.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாக அங்கு விளையும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய அந்நிய நாடுகள் அஞ்சுகின்றன. கேரள மாநிலத்திலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய சென்ற மே 29ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்தது. மேலும், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளும் கேரளாவிலிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்யத் தடை விதித்திருந்தன. இந்நிலையில் இந்தத் தடையை நீக்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அந்நாட்டின் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த அறிவிப்பைத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் அனைத்துக் காய்கறிகளும் பழங்களும் எவ்வித நோய்த் தாக்குதலாலும் பாதிக்கப்படவில்லை என்ற சான்றுடன்தான் இறக்குமதி செய்யப்படும் என்ற கட்டுப்பாட்டையும் ஐக்கிய அரபு அமீரகம் விதித்துள்ளது. மனிதனின் மூளையைப் பாதிக்கும் இந்த நிபா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளதால் கேரளாவிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவே அஞ்சுகின்றன. இதனால் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து உணவுப் பொருட்களை குவைத் உள்ளிட்ட நாடுகள் குறைத்துக்கொண்டுள்ளதால் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்பு கிட்டியுள்ளது.�,