Dகேம் ஓவர்: திரை விமர்சனம்!

Published On:

| By Balaji

அடர்ந்த இருள், அமைதியைக் கிழித்துக் கொண்டு திகிலூட்டும் பின்னணி இசையுடன் ஒன்றன் பின் ஒன்றாய் நகரும் காட்சிகள், திடமான மனம் கொண்டவர்களை இருக்கையின் நுனிக்கும், மற்றவர்களை பயத்தின் உச்சிக்கும் கூட்டிச் செல்லும் கொடூரமான காட்சிகள். கேம் ஓவர் திரைப்படம் தொடங்கும்போதே இப்படி நம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்கிறது.

சமீப காலமாகத் தமிழில் திரில்லர் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகின்றன. இப்போதைய நிலைப்படி வாரம் ஒரு திரில்லர் வெளியாகிறது. அந்த வரிசையில் தற்போது தப்ஸியின் நடிப்பில் கேம் ஓவர் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

அஷ்வின் சரவணன், காவ்யா ராம்குமார் கதை திரைக்கதை அமைத்து, ஒய் நாட் ஸ்டுடியோஸும் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அஷ்வின் சரவணன் இயக்கியுள்ளார். வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசை ரான் ஏதன் யோஹான்.

ஆரம்பக் காட்சியில் ஒரு பெண் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். ஏன், எதற்கு, யார் என்ற பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன. அதற்கான விடை தேடும் பயணமாக கேம் ஓவர் இருக்கும் என்ற எண்ணம் நமக்குள் ஏற்படுகிறது. முதல் காட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தருவதிலும், சுவாரஸ்யம் குறையாமல் திகிலூட்டுவதிலும்தான் ஒரு திரில்லர் திரைப்படத்தின் வெற்றி பொதிந்துள்ளது. அந்த அம்சத்தில் ‘கேம் ஓவர்’ படம் வெற்றி பெற்றுள்ளதா?

தன் வாழ்வில் நடந்த மிகக் கொடூரமான நிகழ்வு ஒன்று, ஸ்வப்னாவின்(தப்ஸி பன்னு) தன்னம்பிக்கை முழுவதையும் நீங்கச் செய்து அவளைத் தளர்த்திவிடுகிறது. இருளைக் கண்டாலே பயப்படுகிறாள். அதிலிருந்து மீண்டு வரப் பலமுறை முயன்றும் இயலாமல் தற்கொலை செய்துகொள்ளத் தயாராகிறாள். அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் இன்னொரு கொடுமை அவருக்கு நேரக் காத்துக்கொண்டிருக்கிறது. அதை முன்கூட்டியே உணர்ந்திடும் ஸ்வப்னா அதை எவ்வாறு எதிர்கொள்கிறார், அவர் காப்பாற்றப்பட்டாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை. தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த ஒருவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள நடத்தும் போராட்டமாக ‘கேம் ஓவர்’ அமைந்துள்ளது.

வீடியோ கேம் டெவலப்பராக வரும் தப்ஸி, ஒவ்வொரு முறையும் தான் வடிவமைத்த விளையாட்டை விளையாடி அதில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அடுத்த முறை இன்னும் சரியாக விளையாடி வெற்றியை நோக்கி நகற்பவர். அதே விதத்தில் அவரது வாழ்கையிலும் சில வாய்ப்புகள் தரப்பட்டால் எப்படி இருக்கும் என்பது போன்று இரண்டாம் பகுதி அமைகிறது.

ஒரே வீட்டிற்குள் ஒருசிலரை மட்டும் மையமாக வைத்து திரில்லர் கதை உருவாக்கியிருப்பதும், ஓடிச் சென்று தப்பிக்க சாத்தியக் கூறுகள் இல்லாத, கால்களை அசைக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருக்கும் நாயகியின் பாத்திர வடிவமைப்பும் நம் இதயத் துடிப்பை இன்னும் வேகமாக்குகின்றன.

ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் நீளம் கொண்ட திரைப்படத்திற்கு முற்றும் போடப்பட்டு படம் முடிந்த பின்னரும் திரையரங்கை விட்டு எழுந்து வர இயலவில்லை, யார் அந்த கொலைகாரர்கள், அவர்கள் எப்படி சரியாக தப்ஸியை அடையாளம் கண்டு கொலை செய்ய வருகிறார்கள், தப்சிக்குள் இருந்தது அமானுஷ்ய சக்தியா அல்லது இவை அனைத்தும் அவரது கற்பனை மட்டுமா எனப் பல கேள்விகள் படம் முடிந்த பின்னும் பதிலளிக்கப்படாமல் உள்ளன.

ஆரம்பக் காட்சியில் துவங்கும் திகிலும் பயமும் பல கேள்விகளை நம்முள் விதைத்து இடைவேளைக்குப் பின்பான திரைப்படம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுகின்றன. ஆனால், இரண்டாம் பகுதியில் சுவாரஸ்யம் குறைந்துவிடுவதும். யூகிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ள காட்களும் படத்திற்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றன.

இந்தப் படத்திற்காக தப்ஸி கடினமாக உழைத்துள்ளார் என்பது திரையில் வெளிப்படையாகத் தெரிகிறது. அழுகை, கோபம், பயம் என ஒவ்வொரு உணர்ச்சியும் அவர் முகத்தில் அத்தனை அழகாய் வெளிப்படுகிறது. எத்தனை வலிமையான திரைக்கதையாய் இருந்தாலும் அதை நமக்குள் ஊடுருவச்செய்யத் திறமையான நடிகர்கள் இல்லை என்றால் நிச்சயம் வெற்றி பெற இயலாது. அந்த விதத்தில் கேம் ஓவர் திரைப்படத்தில் தப்ஸியின் பங்கு மிகவும் வலுவானது. கலாம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வினோதினியும் மிக முக்கியமான பங்காற்றுகிறார். படத்தின் முக்கியத் திருப்புமுனையாக அமையும் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்துள்ளார்.

திரில்லர் திரைப்படங்களில் எப்போதும் ஒளிப்பதிவிற்கும் பின்னணி இசைக்கும் முக்கியப் பங்கு உள்ளது. அந்த விதத்தில் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். எடிட்டர் ரிச்சர்ட் கெவின் இரண்டாம் பாதியை இன்னும் கவனமாகக் கையாண்டிருக்கலாம்.

இடைவேளைக்கு முன்பான கதையாலும் பல திகிலூட்டும் காட்சிகளாலும் இந்தப் படம் தனித்துவம் பெறுகிறது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[பசங்கதான் பொண்ணுங்கள தெரிஞ்சிக்கணும்: அஜித்](https://minnambalam.com/k/2019/06/13/70)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share