Dகிரிஜா இடத்தில் சண்முகம்

Published On:

| By Balaji

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் பணிக்கு திரும்பும்வரை நிதிச் செயலாளர் சண்முகம் தலைமை செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் இல்லத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சில நாட்களுக்கு முன்பு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு வீட்டுக்கு வரும் வழியில் தவறி விழுந்தார். இதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரிஜா வைத்தியநாதன், நேற்று வீடு திரும்பினார். தற்போது மீண்டும் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே கிரிஜா வைத்தியநாதன் பணிக்கு திரும்பும் வரை தலைமை செயலாளர் பணியை, நிதித்துறை செயலாளர் சண்முகம் கூடுதலாக கவனிப்பார் என்று அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இன்று ( டிசம்பர் 17) சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து பூங்கொத்து கொடுத்து நலம் விசாரித்தார்.

ராமமோகன ராவுக்குப் பிறகு தலைமைச் செயலாளர் பதவிக்கு சசிகலாவால் முன்னிறுத்தப்பட்டவர் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகம்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் கிரிஜா வைத்தியநாதன் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான அதே சண்முகம்தான், கிரிஜா வைத்தியநாதன் பணிக்குத் திரும்பும் வரை தலைமை செயலாளர் பணிகளை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel