Dஐபிஎல்: உதவாத அரை சதங்கள்!

public

ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற இனிவரும் ஐந்து போட்டிகளிலும் கட்டாய வெற்றியை எதிர்நோக்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குமான போட்டி நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் 43 ரன்களில் லீவிஸ் ஆட்டமிழந்தார். அவரைத் தொடந்து வந்த ரோஹித் ஷர்மா 11 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் அரை சதம் கடந்தார். கடைசிக் கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் மும்பை அணி 181 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய கொல்கத்தா அணி மும்பையின் பந்து வீச்சில் தடுமாறி, முதல் மூன்று ஓவர்களிலேயே தொடக்க விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ராபின் உத்தப்பா 4 ரன்களில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பினை மயங்க் மார்கண்டே தவறவிட்டார். இதனைப் பயன்படுத்திக்கொண்டு அரை சதம் கடந்த உத்தப்பாவின் ஆட்டம், கொல்கத்தாவின் வெற்றிக்குப் போதுமானதாக அமையவில்லை. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 54 ரன்கள் அடித்தார்.

நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர், டார்சி ஷார்ட் தொடக்க ஜோடி முதல் ஓவரிலேயே பிரிந்தது. இதனையடுத்து அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ஜாஸ் பட்லர் அரை சதம் கடந்தார். இறுதியில் அந்த அணி 152 ரன்கள் குவித்தது.

இதனைத் துரத்திய பஞ்சாப் அணி கே.எல்.ராகுல், கருண் நாயரின் சிறப்பான ஆட்டத்தால் 18.4 ஓவரிலேயே வெற்றி இலக்கைக் கடந்தது. தற்போது பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

**சில முக்கிய நிகழ்வுகள்:**

**மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்**

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்த சீசனில் மும்பை அணியின் டாப் ஸ்கோரர் (ஒரு அணியில் அதிகபட்ச ரன்னை பதிவு செய்யும் நிகழ்வு) என்ற பெருமையை ஆறாவது முறையாகப் பெற்றுள்ளார்.

அது மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் இதுவரை இவர் 1007 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இந்திய சர்வதேச அணியில் இடம்பிடிக்காத ஒரு வீரரின் அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

நேற்று தனது 153ஆவது போட்டியில் விளையாடிய ராபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளில் 4000ஆவது ரன்னைக் கடந்தார். இதற்கு முன் ரோஹித் ஷர்மா 147 இன்னிங்ஸில் 4000 ரன்களை கடந்து இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

நேற்றைய போட்டியில் சுனில் நரைன் ஆறாவது முறையாக ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டைக் கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ரோஹித்தின் விக்கெட்டை அதிக முறை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை வினய் குமாருடன் இவர் பகிர்ந்துகொள்கிறார்.

**ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்:**

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பில் ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டது. இந்தூர் மைதானத்தில் ஒரு அணியின் குறைந்தபட்ச சிக்சர் இதுவாகும்.

பஞ்சாப் அணியின் முஜீப் ரகுமான் 4 ஓவர்கள் சிறப்பாக பந்துவீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி பவர்ப்ளே ஓவரில் 39 ரன்களைக் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் பவர்ப்ளே ஓவர்களில் அந்த அணியின் குறைந்தபட்ச ரன்னாகப் பதிவானது.

நேற்றைய போட்டியில் கே.எல் ராகுல் அரை சதம் கடக்க 44 பந்துகளை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு அதிரடிக்கு மாறிய அவர் 54 பந்துகளில் 84 ரன்களைக் கடந்து ஐபிஎல்லில் தனது அதிகபட்ச ரன்னைப் பதிவு செய்தார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *