சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிஐஎஸ்எப் பாதுகாப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற பாதுகாப்பு தொடர்பாக, தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 2015ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு சிஐஎஸ்எப் எனும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த பாதுகாப்பு வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 31) தலைமை நீதிபதி விஜய கம்லேஷ் தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு மீதான விசாரணை நடந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்துக்கான சிஐஎஸ்எப் பாதுகாப்பை அடுத்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.�,