ஸ்மார்ட் கார்டில் குளறுபடிகள் நடைபெறுவது அதிகரித்துவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சரோஜா (42) என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவருடைய படத்துக்குப் பதில் நடிகை காஜல் அகர்வால் படம் இடம் பெற்றிருந்தது. அதேபோல், தருமபுரி பாப்பிரெட்டிபட்டியை அடுத்த மணியம்பாடியைச் சேர்ந்த மகேஷ் சின்னசாமி (47) என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவருடைய படத்துக்குப் பதிலாகக் காலணியுடன் உள்ள ஆண் ஒருவரின் கால் படம் இடம் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து,திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த நல்லசிவம் (47) என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் விநாயகர் படமும், தர்மபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் நாயின் படமும், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஓபுளாபுரத்தை சேர்ந்த தயால்சுல்தான் காதர்சா ராவுத்தர் (53) என்பவரின் ஸ்மார்ட் கார்டில் தேசியக் கொடியும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார் கார்டில் மூதாட்டி ஒருவரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அனுப்பூர் மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம்.வினோத்குமார் (29). இவருக்குக் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் அவரது புகைப்படத்துக்கு பதிலாக 70 வயது மூதாட்டியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து அதிகாரிகளிடம் வினோத்குமார் முறையிட்டுள்ளார்.
ஸ்மார்ட் கார்டில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே பெயர், முகவரி படம் மாறியிருந்தால் இணையதளத்திலோ அல்லது இ-சேவை மையங்களுக்கோ சென்று சரி செய்துவிடலாம் என அதிகாரிகள் வினோத்குமாரிடம் கூறியுள்ளனர்.
ஸ்மார்ட் கார்டில் குளறுபடிகள் ஏற்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்துவருகிறது.�,