இலங்கை புதிய அரசியலைப்பு – ஒரு பார்வை!

Published On:

| By Balaji

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை தனக்கான புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்க இருக்கிறது. இதற்காக சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு திரட்ட இலங்கை அரசு முடிவு செய்திருக்கும் நிலையில், பல தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

புதிய அரசியல் சாசனம் தொடர்பாக முக்கியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திராக் கட்சியும் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்தியா 13 -வது சட்டத்திருத்தத்திற்கு ஏற்ப புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்கிறது. ஆனால் 13 -வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் பட்டதை இலங்கை நீதித்துறை ரத்து செய்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியல் சாசனம் தொடர்பாக,

‘’ புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் போது நாட்டை பிளவுபடுத்த முனைய போவதில்லை. ஒற்றையாட்சிக்கு உட்பட்டே அரசியலமைப்பைத் தயாரிப்போம். நான் ஒரு இலங்கையர், இந்த நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து தேசத்தை ஐக்கியப்படுத்துவற்கு எனக்கு அனைவரும் இடமளிக்க வேண்டும். நான் நாட்டை பிளவுப்படுத்துவற்கு ஒருபோதும் விடமாட்டேன்.அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக சர்வாதிகாரம் மேலோங்க செய்யப்பட்டது. ஆனால் நாம் அடுத்த முப்பது வருடங்களுக்கு நாட்டை நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வரவே முனைகின்றோம்.இந்த சந்தர்ப்பத்தில் வீணான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம். எமது வேலைத்திட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெறுமனே குறுகிய சிந்தனைகளுக்கு வீதியிலிறங்கி போராடுபவர்களை அரசாங்கம் கண்டுக் கொள்ளாது.21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றால் போல் அரசியலமைப்பு உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஆகவே புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவாக மக்கள் தங்களுடைய கருத்துக்களை மின்னஞ்சல் , தொலைநகல், முகநூல்களினூடாக முன்வைக்க முடியும்.தற்போதைக்கு வயோதிப நிலையிலுள்ளவர்களின் கருத்துக்களை வினவுவதற்காகவே வீடு வீடாக சென்று கருத்துக்களை கோருவதற்கு விசேட குழு நிறுவப்பட்டுள்ளது. எனவே புதிய அரசியலமைப்பிற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ” என்றார் ரணில்.

முன்னாள் அதிபர் ராஜபக்சே,

கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, ‘’புதிய அரசியல் அமைப்பை உருவாக்குகிறவர்களுக்கு உரிய ஆதரவை அளிப்பேன். ஆனால் நாம் உருவாக்கும் அரசியல் அமைப்பு நெகிழ்வுத் தன்மை உடையதாக இருக்க வேண்டும்.அதிகாரப் பகிர்வு, எந்தக் காரணத்தைக் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக் கூடாது. பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க அனுமதிக்க முடியாது.காவல்துறை அதிகாரங்களை எந்தக் காரணம் கொண்டும் மாகாணங்களுக்கு வழங்க முடியாது.இந்தியா போன்ற பெரிய நாடுகளில் காவல்துறை அதிகாரங்களைப் பகிர்வது சாத்தியம் இலங்கையில் அது சாத்தியமில்லை,இலங்கையை விடப் பல மடங்கு பெரியதான தமிழ் நாட்டில் ஒரே ஒரு காவல்துறைதான் காணப்படுகிறது.அதானால் காவல் துறை அதிகாரங்களை பகிர்வது இலங்கைக்கு ஏற்புடையதாக இருக்காது” என்றார் ராஜபக்சே.

புதிய அரசியல் சாசனத்தில் தமிழ் மக்கள் தரப்பில் பிரதானமாக இரு கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள். ஒன்று காவல் துறை அதிகாரம், இன்னொன்று நிலங்களைக் கையாளும் சுய அதிகாரம், இந்த இரண்டையுமே சிங்களத் தரப்பு தமிழர்களுக்கு விட்டுக் கொடுக்க மறுக்கிறது. 13 -வது அரசியல் சாசனத்தில் இருந்த பல உரிமைகள் பறி போன நிலையில் புதிய அரசியல் சாசனத்தில் சிறுபான்மை மக்களின் இடம் எது என்ற கேள்வி எழுந்துள்ளது!,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share