இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 5-ந் தேதி கூட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முடிவு செய்துள்ளதாக புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் இருக்கை ஒதுக்கப்பட இருக்கிறது.
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்தார் மைத்திரிபால சிறிசேனா. இதையடுத்து நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ந் தேதி வரை முடக்கவும் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார்.
இப்புதிய அரசியல் மாற்றங்கள் சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மை உள்ளவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.
பிரிட்டனோ, தற்போதைய நிலையில் ரணில் விக்கிரமசிங்கேதான் இலங்கையின் பிரதமர் என்பது சர்வதேச நிலைப்பாடு என தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் நேற்று (அக்டோபர் 31) மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இலங்கையின் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே தாங்கள் செயல்பட்டு வருகிறோம் என மைத்திரிபால சிறிசேனா உறுதியளித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் ஹனா சிங்கர் சந்தித்திருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் முடிவை திடீரென இன்று (நவம்பர் 1) மைத்திரிபால சிறிசேனா ரத்து செய்திருக்கிறார். கொழும்பில் பல்கலைக் கழக பேராசிரியர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் மகிந்த ராஜபக்சே இத்தகவலை தெரிவித்தார்.
வரும் 5-ந் தேதி நாடாளுமன்றத்தை கூட்ட மைத்திரிபால சிறிசேனா முடிவு செய்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்சே கூறினார். அத்துடன் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் இருக்கை ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.�,