Cஇந்தியச் சுற்றுலாப் பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் திட்டங்களை மொரீசியஸ் வகுத்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 88,000 பேர் மொரீசியஸ் நாட்டுக்குச் சுற்றுலா செல்கின்றனர். இந்த எண்ணிக்கையை 2020ஆம் ஆண்டுக்குள் 1.2 லட்சமாக உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக மொரீசியஸ் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் அரவிந்த் பந்தன் கூறியுள்ளார். மொரீசியஸ் நாட்டுக்கு இந்தியச் சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் விதமாக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி சாலையோரக் கண்காட்சி நடத்தப்பட்டது.
இதில் அவர் பேசுகையில், “மலிவான கட்டணத்தில் ஆடம்பர சுற்றுலா அளிக்கும் நாடாக மொரீசியஸ் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோல்ஃப், ஸ்கை டைவிங், ஸ்பா, ஜிப்-லைனிங் போன்ற பல வசதிகள் இங்கு உள்ளன. அதுமட்டுமின்றி புதிதாகத் திருமணமானவர்களைக் கவரும் அம்சங்களும் மொரீசியஸில் சிறப்பாக உள்ளன. புதிதாகத் திருமணமான அதிகளவிலான இந்தியத் தம்பதிகள் தங்களது தேனிலவுக்கு மொரீசியஸ் வருகின்றனர். பாலிவுட் சினிமாவைக் கவரும் நாடாகவும் மொரீசியஸ் உள்ளது. அண்மையில் கூட சில திரைப்படங்களின் காட்சிப் பதிவுகள் இங்கு நடந்தன. இங்கு திரைப்படங்கள் எடுக்கச் சில ஊக்கத் திட்டங்களையும் அரசு அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 1.2 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்.�,