�
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்வதில் இருந்த சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.
சர்வதேச அளவில் ஆப்பிள் உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இருப்பினும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. சென்னை, கொல்கத்தா, மும்பை, கொச்சின் ஆகிய நகரங்களின் விமான நிலையங்கள் வாயிலாகவும் துறைமுகங்கள் வாயிலாகவும் ஆப்பிள் பழங்கள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆப்பிள் இறக்குமதியில் இந்திய அரசு அவ்வப்போது சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஆப்பிள் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன்படி இந்தியாவின் எந்தத் துறைமுகம் வழியாகவும், எந்த விமான நிலையம் வழியாகவும் ஆப்பிள்களை எவ்விதத் தடையுமின்றி இறக்குமதி செய்ய முடியும்.
இந்த அறிவிப்பால் இந்தியாவின் ஆப்பிள் சந்தையில் ஆப்பிள்களுக்கான தட்டுப்பாடு எதுவும் இருக்காது என்பதோடு அவற்றின் விலையும் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை இந்தியாவின் அந்நிய வர்த்தக அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. இந்தியா தற்போது அமெரிக்கா, சீனா, நியூசிலாந்து, இத்தாலி, ஈரான், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஆப்பிளை இறக்குமதி செய்கிறது. 2017 ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரையில் இந்தியா மொத்தம் 298 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
�,