சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்குக் கீழ் பிரதமர் மோடி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா, அதென்ன பறவை எச்சமா என கேள்வி எழுப்பியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா நடிப்புக்குப் பின்னர் காங்கிரசில் இணைந்த அவர் அக்கட்சி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போது காங்கிரசின் சமூக வலைதள குழுவிற்குப் பொறுப்பாளராக இருக்கிறார்.
இவர் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடியின் மெழுகுச் சிலையில் பிரதமரே திருடன் என நெற்றியில் எழுதிக்கொள்வது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார். இந்தச் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து அவர் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சர்ச்சை ஓய்ந்த நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் திவ்யா. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவரும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் நிறுவப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான (182 மீட்டர்) இந்தச் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சியினர், மகாத்மா காந்திக்கு சிலை எழுப்பாதது ஏன் என்பன உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் திவ்யா ஸ்பந்தனா, படேல் சிலையின் பாதத்துக்குக் கீழ் நரேந்திர மோடி நின்று கொண்டிருக்கும் படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, அது என்ன பறவையின் எச்சமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ”உம்ம்ம், இல்லை… இதன்மூலம் காங்கிரஸ் மதிப்புதான் வீழ்ச்சியடைகிறது. வரலாற்றின் மீதான ஏளனமும், பிரதமர் மோடியின் மீதான வெறுப்பும்தான் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த தூண்டுகிறது. இதுதான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அன்பு அரசியல் என்பதைக் காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளது.
பாஜக கண்டனத்துக்கு பதிலளித்துள்ள திவ்யா, “என் கருத்துக்கள் என்னுடையது, நான் என்ன அர்த்தத்தில் சொல்ல வந்தேன் என்பதையெல்லாம், தெளிவுபடுத்த போவதில்லை, ஏனென்றால் அதற்கு உங்களுக்குத் தகுதி இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
�,”