பெட்ரோல் டீசல் உயர்வு, ரயில் கட்டண உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு என அத்தியாவசிய பொருட்களுக்கான விலை தினசரி உயர்ந்து வருகிறது.
அந்தவகையில் இம்மாதம் மட்டும் மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்தைப் பொறுத்து மாதம்தோறும் சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் ஒரே மாதத்தில் இருமுறை தலா ரூ.50 என 100 ரூபாய் உயர்த்தப்பட்டது.
டிசம்பர் 15ஆம் தேதி நிலவரப்படி 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை, ரூ.710ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 15ல் மேலும் ரூ.50 அதிகரித்து 785ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய விலை ரூ.810ஆக உள்ளது.
பெட்ரோல், டீசல் வரிசையில் சிலிண்டர் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இவ்வாறு ஒரே மாதத்தில் மூன்று முறை உயர்த்தப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிலிண்டர் விலை உயர்வு என்பது மக்கள் மீது மத்திய அரசு நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் அதனை உடனே குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**�,