தொழிற்சாலை சட்டம் 1948ன் கீழ் பதிவு பெற்ற, தொழிற்சாலைகளில் பெண் ஊழியர்கள் இரவு நேரங்களில் பணிபுரியலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் நைட் ஷிப்ட்டில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டது என்பது சட்டவிரோதமானது என்ற சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் ஐடி நிறுவனங்கள், கால் செண்டர்களில் இரவு நேரங்களில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் தொழிற்சாலைகளில் இரவு நேர பணிகளுக்குப் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ள கர்நாடக அரசு தொழிற்சாலைகளிலும் பெண்கள் இரவு நேரங்களில் பணி புரியலாம் என்று அறிவித்துள்ளது.
தொழிற்சாலைகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பெண்களை இரவு 7 மணிமுதல் காலை 6 மணி வரை பணியில் ஈடுபடுத்தலாம் என்று அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெண் ஊழியர்களை வற்புறுத்தி வலுக்கட்டாயமாக பணிபுரிய நிர்ப்பந்தப்படுத்தக் கூடாது. இரவு நேரங்களில் பணிபுரிய விருப்பமுள்ள பெண் ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்ற பின்னரே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க நிறுவனம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொழிற்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்குத் தனி கழிவறை, தனி கேண்டீன் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தொழிற்சங்கங்கள் இந்த புதிய அறிவிப்பைச் சந்தேகத்துடன் பார்க்கின்றன. பெண் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு நிர்வாகத்தால் இது மற்றொரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம் என்று அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சிலின் மாநிலக் குழு உறுப்பினர் மைத்ரேய் கிருஷ்ணன் தெரிவித்தார். நைட் ஷிப்ட் அனைவரின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும், அது உண்மையில் தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
�,”