இன்று (பிப்ரவரி 19) தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா கால விதிமுறைகள் மீறல், குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதையடுத்து தமிழக உட்பட இந்தியா முழுதும் கடுமையான போராட்டங்கள் வெடித்தன.
தமிழகத்தில் அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் சிறுபான்மை அமைப்புகளும் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டன. கடந்த மார்ச்சில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்த போராட்டங்கள் ஓய்ந்தன
இந்த நிலையில் தமிழகத்தில் சி.ஏ.ஏ. போராட்டங்களில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 19) அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
“மத்திய அரசு 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் குடியுரிமை திருத்த மசோதா 2019 கடந்த 4.12 .2019 அன்று மக்களவையிலும் 11- 12- 2019 அன்று மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது.
இதையடுத்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் , உருவ பொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்கள் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது”என்று அறிவித்துள்ளார் தமிழக முதல்வர்.
இதேபோல தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு உத்தரவு மீறல் தொடர்பாக சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறைகேடான வழிகளில் இ பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்கள் நலன் கருதி கைவிடப்படுகின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,
**-கவி- வேந்தன்**
�,