ஊரடங்கு பீதி காரணமாக திருப்பூரில் இருந்து வடமாநிலத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர் புறப்பட்டு சென்றதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதுபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது. தொழில் நகரான திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகிறார்கள். குடும்பம், குடும்பமாக வந்து திருப்பூரில் வாடகை வீடுகளில் குடியேறி பணியாற்றி வருகிறார்கள்
இந்த நிலையில், நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விட்டதால் பின்னலாடை தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 17, 18ஆம் தேதிகளில் உற்பத்தி நிறுத்தம் செய்து அடையாள வேலை நிறுத்தத்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா சங்கத்தினர் அறிவித்து இருக்கிறார்கள்.
பெரும்பாலான நிறுவனங்கள் இந்த இரண்டு சங்கத்தின் கீழ் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் வேலை நிறுத்தம் முழு அளவில் இருக்கும். மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி வருவதால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க கொரோனா ஊரடங்கின் கெடுபிடிகளும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, அனைத்து நாட்களிலும் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் சொந்த ஊருக்குப் புறப்பட்டு செல்ல வடமாநிலத் தொழிலாளர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.
நேற்று திருப்பூர் ரயில் நிலையத்தில் பெட்டி, படுக்கைகளுடன் வடமாநிலத் தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக குவிந்தனர். ரயில் வந்ததும் முண்டியடித்து ரயிலில் ஏறி புறப்பட்டனர். புறநகர பகுதியில் தூரத்தில் குடியிருந்தவர்கள் இரவு நேரத்திலேயே திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்து பின்னர் ரயிலில் சென்றனர். ரயில் முன்பதிவு மையங்களிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
**-ராஜ்**
.�,