சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். ஆனால், ஆசையாக செய்யும் சில உணவுகள் சில நேரங்களில் சொதப்பிவிடும். உதாரணத்துக்கு, ‘எல்லாருக்கும் பிடிக்கும் என்று மோர்க்குழம்பு வைத்தேன். திரிந்தது போல் ஆகிவிட்டதே ஏன்?’ என்ற கேள்வியும், ‘மோர்க்குழம்பை எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும்?’ என்கிற கேள்வியும் எழும். இதோ அதற்கான தீர்வு…
அந்த நாள்களில் மீந்துபோன தயிரில் மோர்க்குழம்பு செய்தார்கள். ஆனால், இப்போது நம்முடைய உணவு வகைகளிலேயே ஒன்றாக மோர்க்குழம்பு ஆகிவிட்டதால் புதிதாகத் தயிரை வாங்கி மோர்க்குழம்பு செய்கிறோம். மோர்க்குழம்பு புளித்துப் போய் இருந்தால் பலருக்குப் பிடிப்பதில்லை. அவ்வப்போது தயிர் வாங்கி மோர்க்குழம்பு தயாரித்தால், அதன் சுவை மிகுதியாக இருக்கும்.
மோர்க்குழம்பு தயாரிக்கும்போது கெட்டியான தயிரைத்தான் பயன்படுத்த வேண்டும். தயிருடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மெல்லிதான காட்டன் துணியில் வடிகட்டி, மிக்ஸியில் லேசாக அடித்துவிட்டுச் செய்தால் திரியாமலிருக்கும்.
கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், தனியா அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன் அனைத்தையும் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். தண்ணீரை வடித்து, இத்துடன், சிறிய துண்டு இஞ்சி மற்றும் தேங்காய்க்கீற்றுகள் இரண்டு, பச்சை மிளகாய் இரண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். வெள்ளைப்பூசணி, கத்திரிக்காய், வெண்டைக்காய் ஆகிய காய்களில் ஏதேனும் ஒன்றில் 150 கிராம் அளவு எடுத்து நறுக்கி, சிறிதளவு தண்ணீர், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
வேகவைத்த காய் மற்றும் அரைத்த கலவை, அடித்துவைத்திருக்கும் தயிர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். முதல் கொதிவந்ததும் இறக்கி, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, கறிவேப்பிலை, மல்லித்தழை தூவினால் சுவையான மோர்க்குழம்பு ரெடி.
கடலைப்பருப்பு வடை மாவு மீதம் இருந்தால், வடைகளாகப் பொரித்து, காய்கறிகளுக்குப் பதிலாக மோர்க்குழம்பில் சேர்த்தால் சுவை கூடும்.
மோர்க்குழம்பை லேசாகச் சூடு செய்யலாமே தவிர, திரும்பத் திரும்ப கொதிக்க வைத்துப் பயன்படுத்தக் கூடாது.
சரி, கெட்டியான, புளிப்பில்லாத, வாசனையான தயிர் தயாரிப்பது எப்படி?
க்ரீம் அதிகமுள்ள பாலை வாங்கி சிறிதளவு தண்ணீர் மட்டுமே கலந்து காய்ச்சவும். புதிதாக சிறிய தயிர் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொள்ளவும். காய்ச்சி வைத்த பால் வெதுவெதுப்பாக ஆறியதும் இரண்டு கரண்டி பாலை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தயிர் விட்டு ஸ்பூனால் நன்கு கலக்கிக் கொள்ளவும். பிறகு, கலக்கியதை மொத்த பாலிலும் சேர்த்து, இரண்டுமுறை ஆற்றி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்தால், கெட்டியான புளிப்பில்லாத, வாசனையான தயிர் கிடைக்கும்.
[நேற்றைய ரெசிப்பி: புரொக்கோலி பீஸ் புலாவ்](https://minnambalam.com/k/2021/01/09/2)
�,