சாதிய பாகுபாடு: தெற்கு திட்டை ஊராட்சிச் செயலாளர் கைது!

Published On:

| By Balaji

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமரவைக்கப்பட்ட விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சிச் செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு திட்டை ஊராட்சியில் மொத்தம் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 100 குடும்பத்தினர் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் இந்த ஊராட்சி மன்றத் தலைவரான பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரியை, துணைத் தலைவர் மோகன்ராஜ் தரையில் அமரவைத்துச் சாதிக் கொடுமைக்கு உள்ளாக்கியதாகப் புகார் எழுந்தது. இந்த ஊராட்சி மன்றத்தில் மொத்தம் 6 உறுப்பினர்கள் உள்ள நிலையில், மற்ற 5 பேரும் மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் எந்த ஒரு கூட்டமானாலும், மற்றவர்கள் சேரில் அமர்ந்திருக்க, ராஜேஸ்வரியை மட்டும் துணைத் தலைவர் மோகன்ராஜ் தரையில் அமர வைத்து சாதிய பாகுபாடு காட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ராஜேஸ்வரி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஊராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் செயலாளர் சிந்துஜா உள்ளிட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புவனகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேற்று நேரில் சென்று ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து, ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டார். மேலும் ஊராட்சி துணைத் தலைவருடன் இணைந்து ஊராட்சி தலைவரைச் சாதிய ரீதியாகத் தொடர்ந்து அவமதித்த செயல்களுக்குத் துணையாக இருந்ததாகக் கூறி ஆறாவது வார்டு உறுப்பினர் சுகுமார் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீதும் எஸ்சி /எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தலைமறைவாகியுள்ள மோகன்ராஜைத் தேடி வருவதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share