நார்ச்சத்துகள் நிறைந்த வெள்ளரி ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதோடு வாய் துர்நாற்றத்தைப் போக்கக்கூடியது. கூடவே பல் ஈறுகளைப் பாதுகாக்கும் திறன் கொண்டது. இன்சுலினை சுரக்கச்செய்யும் கணைய செல்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கியை (ஹார்மோன்) கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளரி சிறந்த மருந்தாகிறது. இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நாளில் இந்த வெள்ளரி கேரட் ஊறுகாய் செய்து மதிய விருந்தை மேலும் சிறப்பாக்குங்கள்.
**என்ன தேவை?**
வெள்ளரிக்காய் – ஒன்று
கேரட் – ஒன்று
பச்சை மிளகாய் – 2 (கீறி வைக்கவும்)
மஞ்சள் கடுகு – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – ஒரு டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
வெள்ளரிக்காய், கேரட்டின் தோல்களைச் சீவி, சிறிய துண்டுகளாக்கவும். ஒரு பாத்திரத்தில் வெள்ளரித் துண்டுகள், கேரட் துண்டுகள், பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு, உப்பு கலந்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். காய்கறிகளில் இருந்து தண்ணீர் வெளியேறிவிடும். பிறகு, வாணலியில் எண்ணெய்விட்டு மஞ்சள், கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து, காய்கறி கலவையுடன் சேர்த்து கலக்கவும். இதை செய்த உடனேயும் சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று அல்லது நான்கு நாட்கள் வரையும் பயன்படுத்தலாம்.
**[நேற்றைய ஸ்பெஷல்: வெள்ளரி மின்ட் சால்ட் லஸ்ஸி!](https://minnambalam.com/public/2022/04/13/1/cucumber-mint-lassi)**
.