வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு பயிற்சி கட்டணம் குறைப்பு!

public

வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் 3 லட்சத்து 54 ஆயிரத்தில் இருந்து 29 ஆயிரத்து 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதி நவீன நரம்பியல் சிகிச்சைப் பிரிவிற்கான புதிய கட்டடத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(பிப்ரவரி 25) திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம், எலும்பு புற்றுநோய்ப் பாதிப்பிலிருந்து குணமடைந்த14 வயது சிறுமியை அமைச்சர் வாழ்த்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வெளிநாடுகளில் மருத்துவம் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் எனும் உள்ளுறை பயிற்சிக்கு இதுவரை ரூ.3.54 லட்சம் கட்டணம் செலுத்தி வந்தனர். வருவாய் குறைவாக இருப்போர்தான் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கின்றனர்.
ஆனால், பயிற்சிக்கு இந்தளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதனால், பயிற்சிக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் 3 லட்சத்து 54 ஆயிரத்தில் இருந்து 29 ஆயிரத்து 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *