பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாகும் அளவுக்கு கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஆழமான பிரச்சினைகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் கவலை தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் மட்டும் பரிமாற்றம் நடைபெறும் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை. அதை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளும் இல்லை. சமீபகாலமாக, கிரிப்டோ கரன்சியில் முதலீடு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற வங்கிகள் மற்றும் பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்ட அவர், “கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஆழமான பிரச்சினைகள் இருக்கின்றன. நன்றாக பரிசீலித்த பிறகு ரிசர்வ் வங்கி இதை சொல்கிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கும், நிதி ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அது உருவெடுக்கக்கூடும்.
இதுதொடர்பாக மிகவும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும். கிரிப்டோ கரன்சியில் கணக்கு தொடங்குவதற்காக முதலீட்டாளர்களுக்கு கடன் அளிக்கப்படுவதாக நாங்கள் கேள்விப்பட்டோம். அவர்களை கவர வேறு சில ஊக்கச்சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இது கண்காணிக்கப்பட வேண்டிய விஷயம்” என்று கூறியுள்ளார்.
**கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?**
அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் கரன்சிகள், வங்கிக் கணக்குகள் மூலமும், கிரெடிட் கார்டுகள் மூலமும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அரசாங்கங்களின் தலையீடு பிடிக்காத சுதந்திர மனிதர்கள் கண்டு பிடித்ததே கிரிப்டோ கரன்சி. 2009-ல் சடோஷி நகமோடோ என்ற முகம் தெரியாத மனிதரால் பிட்காயின் எனும் கரன்சி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கிரிப்டோ ஒரு ஃபிஸிக்கல் கரன்சி அல்ல; டிஜிட்டல் கரன்சி. இவை பிளாக்செயின் என்ற டெக்னாலஜி மூலம் இணையதள பரிவர்த்தனைக்காகத் தயாரிக்கப்படுபவை. கிரிப்டோ கரன்சியில் டெதர், போல்காடாட், லைட் காயின், எதீரியம் என்று சுமார் 6,700 வகை உண்டு.
டாலர், பவுண்ட், ரூபாய் போன்றவை அந்தந்த நாடுகளில் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், உலகம் முழுவதும் செல்லுபடியாகும் நாணயங்களாக கிரிப்டோ காயின்கள் உள்ளன. இந்த நாணயத்தின் மதிப்பை எந்த ஒரு நாட்டாலும் நிர்ணயம் செய்ய முடியாது. அதாவது, ஒரு நாட்டின் வர்த்தக வீழ்ச்சியால் இந்த நாணயத்தின் மதிப்பு சரிந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை.
கிரிப்டோ காயினை வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டின் கிரிப்டோ காயின் மாற்று அமைப்புக்கான இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். இந்த இணையதளங்களில் மட்டுமே கிரிப்டோ காயினை வாங்கவும், விற்கவும் முடியும். இந்த இணையதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. வெளிநாடுகளில் இதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கின்றன. டெபிட் கார்டு வசதி கூட உண்டு. ஆதலால் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கென தனிச் சந்தை உருவாகியுள்ளது. யுடெமி போன்ற புகழ் பெற்ற தளங்களில் கிரிப்டோ பற்றிய ஆன்லைன் வகுப்புகள் அணி வகுக்கின்றன. பின்னொரு காலத்தில் இது பங்குச் சந்தை போன்று பலராலும் விரும்பப்படும் முதலீட்டு வழியாகலாம். ஆனால், இன்றைய தேதியில் இது ஒரு நிலையற்ற முதலீடாக விளங்குவதால் சிறு முதலீட்டாளர்கள் அவசரமாக இதில் இறங்காமல் பொறுமை காப்பது நல்லது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
**-ராஜ்**
.�,