கொரோனா எதிரொலியாகச் சென்னை துறை முகத்துக்கு வெளிநாட்டுக் கப்பல் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசின் அச்சத்தால், பல்வேறு நாடுகளிலும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளும் தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக இத்தாலி, ஈரான், கொரியா, ஜப்பான் மற்றும் சீனாவுக்கு விசா மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்பெயின், ஜெர்மனி , பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது, இணைய வழி விசாக்களும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்தநிலையில் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை சென்னை துறைமுகத்துக்கு வெளிநாட்டுப் பயணிகள் கப்பல் வருவதற்குத் தடை விதிக்கப்படுவதாக சென்னை துறைமுகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசின் முடிவின் படி தடை விதிக்கப்படுவதாகத் துறைமுகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கேரளாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 11) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா அறிகுறியுடன் சோதனைக்கு அனுப்பப்பட்ட அனைத்து ரத்த மாதிரிகளும் நெகட்டிவ் என வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை. கொரோனா ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
**கவிபிரியா**�,