Uமீன் குட்டையில் பிடிபட்ட முதலை!
;
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி அருகே மீன் குட்டையில் கிடந்த முதலையை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பிடித்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில், குமராட்சி அருகே கீழவன்னியூர் கிராமத்தில் மீன் குட்டை ஒன்று உள்ளது. இந்தக் குட்டையில் கிடந்த முதலை ஒன்று அடிக்கடி வெளியே தலைகாட்டி, அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 3) அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மீன் குட்டையில் கிடந்த முதலையைப் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து முதலையைப் பிடித்து பாதுகாப்பாகக் கொண்டு சென்று சிதம்பரம் வக்ரமாரி ஏரியில் விட்டனர்.
இதேபோல் வீராணம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் வெள்ளியங்கால் ஓடையில் முதலை ஒன்று கிடக்கிறது. இந்த முதலையை வனத்துறையினர் பிடித்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
**-ராஜ்**
.�,