�ராஜேந்திரபாலாஜியை நாங்குநேரிக்கு அனுப்பாதீர்கள்!-முதல்வருக்கு சென்ற தகவல்!

Published On:

| By Balaji

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.

அதிமுகவில் திருநெல்வேலி முதல் திண்டுக்கல் வரையிலான அனைத்து தென் மாவட்ட நிர்வாகிகளுக்கும் நாங்குநேரியில் தேர்தல் பணி போடப்பட்டுள்ளது. இந்த வகையில் விருதுநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திர பாலாஜிக்கும் நாங்குநேரியில்தான் தேர்தல் பணி.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சில வாரங்களாகவே அடிக்கடி சர்ச்சைப் பேச்சுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார். போதாக்குறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விருதுநகர் எம்பி. மாணிக் தாகூர் ஆகியோர் பற்றி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி டிவி பேட்டிகளிலும், பொதுக்கூட்டத்திலும் பேசிய வார்த்தைகளால் காங்கிரசார் கோபத்தில் இருக்கிறார்கள். காவல்நிலையங்களில் புகார்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் தென் மாவட்ட அதிமுக சீனியர்கள் சிலர் முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் தகவலை அனுப்பியிருக்கிறார்கள்.

“தென் மாவட்டம் என்ற அடிப்படையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் நாங்குநேரிக்கு தேர்தல் பணியாற்ற அனுப்பப்படுவது இயல்புதான். ஆனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சுகள் மற்ற அமைச்சர்களைக் காட்டிலும் எல்லைத் தாண்டிப் போய்விட்டது. அவரை நாங்குநேரி தொகுதியில் பிரசாரத்துக்கு அனுப்பினால் விரும்பத் தகாத வார்த்தைகளைப் பேசி மக்களிடம் மேலும் நமக்கு பெயர்தான் கெடும். அவர் விருதுநகரில் பேசியது போல் நாங்குநேரியில் பேசினால் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் குவியும் இடத்தில் சுமூகமாக இருக்காது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் கூட ஏற்படும். எனவே ராஜேந்திரபாலாஜியை தேர்தல் பணிக்கு அனுப்ப வேண்டாம். அப்படி அனுப்பினால் பக்குவமாக பேசும்படி எச்சரிக்கை செய்து அனுப்புங்கள்” என்று முதல்வருக்கு அவர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

இதற்கு முதல்வர் தரப்பில் இருந்து இன்னும் அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share