}பட்டாசு ஆலை: ஒரே மாதத்தில் மூன்று முறை விபத்து!

Published On:

| By Balaji

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சி பகுதியில் தங்கராஜ் பாண்டியன் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்தப் பட்டாசு ஆலையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பதற்றமடைந்த தொழிலாளர்கள் பதறியடித்து தப்பி ஓடினர். அடுத்தடுத்த கட்டடங்களுக்கு தீ பரவி கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 19 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக, தொழிற்சாலை உரிமையாளர் தங்கராஜ் பாண்டியன் மற்றும் போர்மேன் ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்து வந்தார். பின்பு, இந்த விபத்து குறித்தான விசாரணை நடைபெற்று வருவதாகவும், நீர்த்துபோன மருந்தைப் பயன்படுத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கூறினார்.

கடந்த 12ஆம் தேதி அச்சன்குளத்தில் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்; 30 பேர் காயமடைந்தனர். கடந்த 13ஆம் தேதி காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார். காளையார்குறிச்சி சம்பவத்தையடுத்து, இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை பட்டாசு ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அச்சன்குளத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ‘பட்டாசு ஆலை தொழிலை முறைப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படுகிறது? விபத்தைத் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share