விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்குக் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. ஆனால், அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 26 வழக்குகளும், புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 30 வழக்குகளும் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, அடையாறு பகுதியில் ஏழு வழக்குகளும், பரங்கிமலையில் இரண்டு வழக்குகளும், பூக்கடை பகுதியில் ஐந்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று சென்னையில் மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
இவர்களின் மீது தன்மையைப் பொறுத்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் 6 மாத சிறைத் தண்டனையும் அல்லது 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டும் தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அப்போது, விதிகளை மீறியதாக சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் சிறுவர்களும் அடக்கம்.
�,