பெண்ணின் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் தீட்சிதர் தர்ஷனை இரு மாதங்களுக்குச் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தர்ஷன், கடந்த 16ஆம் தேதி கோயிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த, அப்பகுதியைச் சேர்ந்த லதா என்ற பெண்ணை தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்று நான்கு நாட்கள் ஆன நிலையில் இன்னும் தர்ஷன் கைது செய்யப்படவில்லை.
அவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தீட்சிதர் தர்ஷன் தலைமறைவாகியிருப்பதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து போலீசார் இன்று தீட்சிதர் தர்ஷனின் அம்மா, அப்பாவிடம் விசாரித்துள்ளனர்.
இதற்கு அவர்கள் சம்பவம் நடந்த நாள் முதல் தர்ஷன் வீட்டுக்கு வரவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்துத் தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளனர். அதுபோன்று கோயிலில் இருக்கும் சக தீட்சிதர்களிடமும் தர்ஷன் குறித்து விசாரித்துள்ளனர். அவர்களும், தர்ஷன் கோயிலுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், தர்ஷன் சென்னை சென்றிருக்கலாம் என பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையை அடுத்து போலீசார் சந்தேகித்துள்ளனர். சென்னையில் தர்ஷன் கல்லூரி படிப்பைப் படித்ததாகவும், அதனால் சென்னை சென்று நண்பர்கள் வீட்டில் அவர் தங்கியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.
இந்நிலையில் அலுவல் ரீதியாகச் சிதம்பரம் எஸ்.ஐ சுரேஷ் முருகன், மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சென்னை சென்றுள்ள நிலையில், தீட்சிதரைச் சென்னையில் தேடவும் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தர்ஷனை இரண்டு மாதம் கோயில் பூஜை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது,.
தர்ஷன் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவிலியர் சங்கம், மே 17 இயக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இன்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், தர்ஷன் கைது செய்யப்படுவார் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.
�,”