பயனாளிகளின் டிஜிட்டல் ஆவணங்களைச் சேமிப்பது அவசியம்: மத்திய அரசு!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிக்கும் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மாநில/ யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பயனாளிகளின் முழுமையான தகவல்களை டிஜிட்டல் ஆவணங்களாகச் சேமித்து வைப்பது முக்கியம் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 10) கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியது. தடுப்பு மருந்துகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் கோ-வின் (Co-WIN) செயலி குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தை வழங்குவதற்கான தேசிய வல்லுநர் குழு உறுப்பினரான ராம் சேவக் ஷர்மா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தடுப்பு மருந்து ஒத்திகையின்போது பயன்படுத்தப்பட்ட கோ-வின் செயலி செயல்பாடு குறித்தும், மாநில, யூனியன் பிரதேசங்களின் பின்னூட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, எந்த நேரத்திலும் எந்த பகுதியிலும் தடுப்பு மருந்து கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் அதேவேளையில் தடுப்பு மருந்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது என்றும் ராம் சேவக் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஆதார் எண்ணைப் பயன்படுத்துவது குறித்துப் பேசிய அவர், பயனாளிகள் பதிவு செய்யும்போது தற்போதைய செல்பேசி எண்ணுடன் ஆதாரையும் சேர்த்து இணைப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். அதன் வாயிலாகக் குறிப்பிட்ட எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு, போலியான பயனாளிகளைத் தடுக்க முடியும். தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும் பயனாளிகளைத் தெளிவாக அடையாளம் கண்டறிந்து, அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்களை டிஜிட்டல் ஆவணங்களாகச் சேமிப்பது மிகவும் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share