நா. ரகுநாத்
இந்தியப் பொருளாதாரம் குறித்த கவலைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. COVID-19 நெருக்கடிக்கு முன்பே இந்தியப் பொருளாதாரத்தின் நிலை சற்று கவலைக்கிடமாகத்தான் இருந்தது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரத்தின் பல பகுதிகள் முடங்கின. ஏப்ரல் மாதத்தில் 12 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்ததாகவும், அவர்களில் 75 விழுக்காட்டினர் சிறு வியாபாரிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் என்றும் Centre for Monitoring Indian Economy (CMIE) வழங்கும் தரவுகள் தெரிவிக்கின்றன.
வேலை மற்றும் வருமானம் இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வகைப் பாதுகாப்புமின்றி விளிம்புநிலையில் இருப்பதை COVID-19 நெருக்கடி நமக்கு ஊர்ஜிதப்படுத்தியது. அவர்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்பிவிட்டவர்கள் எத்தனை பேர் என்ற துல்லியமான எண்ணிக்கை அரசு உட்பட யாரிடமும் இல்லை. ஆனால், ஆய்வாளர்களும் ஆய்வு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள மதிப்பீடுகளை வைத்துப்பார்க்கும்போது 50 லட்சம் – 3 கோடி பேர் “Reverse Migration” என்று சொல்லப்படும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கக்கூடும் என்று தெரிகிறது.
உலகின் பல நாடுகளின் பொருளாதாரம் பெரியளவில் சுருங்கும் – அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு எனும் GDP வீழ்ச்சியடையும் – என்றும், இந்தியா மற்றும் சீனாவில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்தாலும் பொருளாதாரம் சுருங்க வாய்ப்பில்லை என்றுதான் பன்னாட்டு நிதியம் (IMF) போன்ற அமைப்புகள் முதலில் கணித்தன. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்த போதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொது சுகாதார நெருக்கடி தீவிரமடைந்ததால், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மற்றும் டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகள் என நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிற்கு கணிசமாகப் பங்களிக்கும் பகுதிகள் இவை என்பதால் அதிகளவில் பொருளாதாரப் பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்துள்ளன.
வரும் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் சுருங்கும் என்று ரிசர்வ் வங்கி மே மாதம் இறுதியில் தெரிவித்தது. சுருங்கும் பொருளாதாரம் தானாகவே இயல்புநிலைக்குத் திரும்பாது என்பது அனுபவப்பாடம். Fiscal Policy எனப்படும் நிதிக்கொள்கையை துணிச்சலாகவும், புத்திசாலித்தனத்தோடும் பயன்படுத்தி அரசு பெரியளவில் கடன் வாங்கி செலவு செய்தால் மட்டுமே பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை** [“20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பும், மோடி சர்காரின் பேரியல் பொருளாதார அணுகுமுறையும்”](https://minnambalam.com/public/2020/05/22/9/20-laksh-core-economic-package-and-Modi-Sarkar’s-partial-economic-approach), [“COVID-19 நெருக்கடி – கடன் வாங்கி பொருளாதாரத்தை மீட்க முடியுமா?”](https://minnambalam.com/public/2020/05/29/18/covid-19-how-to-rescue-indian-economic-crisis)** ஆகிய கட்டுரைகளில் விரிவாக எழுதியிருந்தோம்.
**வேகமிழந்த பொருளாதாரம், வீழ்ச்சியடையும் வரிவருவாய்**
ரோஷன் கிஷோர் என்பவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தியப் பொருளாதாரம் தொடர்பான புள்ளிவிவரங்களை அலசி ஆராய்ந்து எழுதிய நான்கு கட்டுரைகள் கடந்த இரண்டு வாரங்களில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்தன. மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரைகள் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய ஆழமான பார்வையை முன்வைக்கின்றன. அவை அடிக்கோடிட்டு காட்டும் போக்குகளை நாம் விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளாக இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துகொண்டே வந்துள்ளது (அட்டவணை 1). கடந்த முப்பதாண்டுகளில் இந்த அளவிற்குப் பொருளாதாரம் வேகமிழந்திருப்பது இதுவே முதல்முறை. இந்த காலத்தில் (2017-18 – 2019-20) கடுமையான வறட்சி, போர், எதிர்பாராத கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற எந்தவொரு எதிர்மறைக் காரணியும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவில்லை எனும்போது, இதுபோன்ற வேகமிழப்பு பொருளாதாரத்தின் கட்டமைப்பைப் பற்றி முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது என்கிறார் ரோஷன் கிஷோர்.
**அட்டவணை 1: இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 2016-17 – 2019-20 (%)**
**ஆதாரம்: [ஹிந்துஸ்தான் டைம்ஸ்](https://www.hindustantimes.com/india-news/addressing-pre-covid-issues-to-be-crucial-for-india-s-recovery/story-KA18SAGU9Uvt0X4pCqAi6H.html)**
பொருளாதார வளர்ச்சி குறைவதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? பொருளாதாரம் வேகமாக வளரும்போதே போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை; அந்த வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்று சேர்வதில்லை. வளர்ச்சியின் வேகம் குறையும்போது அது பொருளாதாரப் படிநிலையில் அடித்தட்டுகளில் இருக்கும் மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். வேகமான பொருளாதார வளர்ச்சியால் நாடு சுபிட்சம் அடைந்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், பொருளாதாரம் வேகமிழக்கும் நேரங்களில் முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் சரியக்கூடும்.
ஊரக இந்தியாவில் தங்கள் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்காததால் விவசாயிகளின் வருமானமும், செலுத்தும் உழைப்புக்கு நியாயமான கூலி கிடைக்காததால் கூலித்தொழிலாளர்கள் வருமானமும் பெரிதும் அடிவாங்கியதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளாகவே ஊரக இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசின் புள்ளிவிவரங்கள், தனியார் துறையின் மதிப்பீடுகள் மற்றும் கள ஆய்வுகள் என அனைத்தும் ஊரகப் பகுதிகளில் உள்ள கிராக்கிப் பிரச்சனையைத் தெள்ளத்தெளிவாக படம்பிடித்துக் காட்டியுள்ளன.
கிராக்கியில் சுணக்கமும் (demand slowdown), தனியார் முதலீடுகளில் தேக்கமும் ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரம் வேகமிழந்துள்ளது என்று தெரிவித்தது பொருளாதார ஆய்வறிக்கை 2018-19. கிராக்கியைத் தூக்கிவிடாமல் தனியார் முதலீடுகளை மீட்டெடுக்க முடியாது என்பது பேரியல் பொருளியல் பாலபாடம். உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு போதிய கிராக்கி இருக்கும், அதனால் பொருட்களை விற்று லாபம் சம்பாதிக்க முடியும் என்று தனியார் துறை நம்பினால் மட்டுமே புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படும்.
மோடி அரசின் புரிதலோ முற்றிலும் வேறாக இருந்தது. அளிப்பு சார்ந்த பிரச்சினைகளால்தான் (supply-side problems) பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது என்று கருதி, முதலீடுகள் மேற்கொள்ள பெருநிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்தோடு கார்ப்பரேட் வருமானவரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இதனால் ஏற்படவிருக்கும் வரியிழப்பு 2019-20 நிதியாண்டில் மட்டும் ரூ. 1.45 லட்சம் கோடி வரை இருக்கும் என்று அரசே தெரிவித்தது. ஆனால், வரிச்சலுகைகளால் பெருநிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்து, உற்பத்தி பெருகி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற கதையாடல் வழங்கப்பட்டது.
**உண்மையில் நடந்தது என்ன?**
2019-20 நிதியாண்டிற்கான மொத்த வரிவருவாய் (ரூ. 20.09 லட்சம் கோடி), 2018-19 நிதியாண்டில் அரசுக்குக் கிடைத்த வரிவருவாயைவிடக் (ரூ. 20.80 லட்சம் கோடி) குறைவு என்றும், 1961-62 க்கு பிறகு இப்படி நடப்பது இதுவே இரண்டாவது முறை என்றும் ரோஷன் கிஷோர் கட்டுரைகளில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். இதற்கு முக்கியக்காரணம் கார்ப்பரேட் வரிவருவாயில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி. 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 7.66 லட்சம் கோடி கார்ப்பரேட் வரிவருவாய் வசூலிக்கப்படும் என்ற மதிப்பீடு வழங்கப்பட்டது. நிதியாண்டின் இறுதியில் கிடைத்தது வெறும் ரூ. 5.56 லட்சம் கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, புதிய தனியார் முதலீடுகள் ஜூன்-செப்டம்பர், அக்டோபர்-டிசம்பர் மற்றும் ஜனவரி-மார்ச் காலாண்டுகளில் குறைந்தன. அதாவது, வரிச்சலுகைகள் எதிர்பார்த்த நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதே இந்த தரவுகள் நமக்கு சொல்லும் சேதி.
ஆக, COVID-19 நெருக்கடி இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதனை வேகமிழக்கச் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. ஏற்கனவே வேகமிழந்த நிலையில் இயங்கிக் கொண்டிருந்த பொருளாதாரத்தை COVID-19 நெருக்கடி இதுவரை நாம் கண்டிராத ஒரு வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்போகிறது என்பதுதான் நிதர்சனம்.
ஒரு பொருளாதாரம் வேகமாக வளர்வதும், பின் வளர்ச்சியின் வேகம் குறைந்துபோவதும் சந்தை
பொருளாதாரத்தில் இயல்புதான். ஆனால், வேகமாக வளரும்போது எதனால் வேகமாக வளர்கிறது என்பதையும், வேகம் குறையும்போது அதற்கான காரணம் என்ன என்பதையும் கண்காணிப்பதே புத்திசாலித்தனமான பொருளாதார மேலாண்மை. அதை செய்யத் தவறியதன் எதிர்மறை விளைவுகளை COVID-19 தீவிரப்படுத்தி உள்ளது என்றால் அது மிகையாக இருக்காது.�,”