~மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இரண்டாம் அலையா?

Published On:

| By Balaji

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகச் சுகாதாரத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,91,651 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 90 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,302 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 16ஆம் தேதி 9,121 பேரும், பிப்ரவரி 17ஆம் தேதி 11,610 பேரும், பிப்ரவரி 18ஆம் தேதி 12,881 பேரும், பிப்ரவரி 19ஆம் தேதி 13,193, பிப்ரவரி 20ஆம் தேதி 13,993 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 14,264 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் ஏறத்தாழ 87,000 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவத் தொடங்கிவிட்டதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இதன் எதிரொலியாக மும்பையில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் விடுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொடர்ந்து அதிகரித்து வந்தால் மகாராஷ்டிரா முழுவதும் மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளதாக நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் திருமண நிகழ்ச்சிகளில் 50க்கும் அதிகமானோரை அனுமதிக்கும் அரங்குகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டு வந்தாலும், கட்டுப்பாடுகளை உலக நாடுகள் தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share