^தமிழகம் வந்த கோவாக்சின் தடுப்பூசி!

Published On:

| By Balaji

சென்னை உட்பட 11 நகரங்களுக்கு நேற்று கோவாக்சின் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

வரும் ஜனவரி 16ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. முதற்கட்டமாக மூன்றுகோடி முன்கள பணியாளர்களுக்கும், அதைத் தொடர்ந்து இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 27 கோடி பேருக்கும் செலுத்தப்படும் என்று தெரிவித்தது.

இந்தச் சூழலில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் நேற்று கோவாக்சின் தடுப்பூசியும் தமிழகத்தில் சென்னை உட்பட 11 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசியின் 16.5 லட்சம் டோஸ் மருந்துகள் மத்திய அரசுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் வெளியிட்ட அறிவிப்பில், கன்னவரம், கௌகாத்தி, பாட்னா, குருஷேத்ரா, பெங்களூரு, புனே, புவனேஸ்வர், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் லக்னோ ஆகிய முக்கிய நகரங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 20,000 தடுப்பூசி மருந்துகள் நேற்று ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. பின்னர் விமான நிலையத்திலிருந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்துக்குப் பிரத்யேக வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டு மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டது. தடுப்பூசி மருந்துகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதுவரை தமிழகத்துக்கு கோவாக்சின், கோவிஷீல்டு என 5.56 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share