அரசு துறைகளில் பாலியல் குற்றச்சாட்டு அதிகரிப்பு!

Published On:

| By Balaji

அரசு துறைகள் மற்றும் பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் தனக்கு சக ஆண் ஊழியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2013ஆம் ஆண்டு உயரதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின்படி விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்றை அமைக்க அணு ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவிட்டது. அக்குழு விசாரணையைத் தொடங்காததால், இரண்டாவது குழு அமைத்து விசாரணை நடத்த அணு ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவிட்டது. இந்த இரண்டாவது குழு விசாரித்து, குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்த நிலையில், இக்குழு விதிப்படி அமைக்கப்படவில்லை என மூன்றாவது குழு ஒன்றை அமைத்து உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். அதில், இரண்டாவதாக அமைக்கப்பட்ட குழுவில் பாலியல் குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்த நிலையில், புகாரை நீர்த்துபோக செய்யும் விதமாக மூன்றாவது குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதனால், மூன்றாவது குழுவை ரத்து செய்தும், இரண்டாவது குழுவின் அறிக்கை அடிப்படையில் ஆண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று (டிசம்பர் 14) நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதை உறுதிசெய்ய வேண்டியது, பணி வழங்வோரின் கடமை. பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில், புகார் அளித்து ஏழரை ஆண்டுகள் கடந்தும் முடிவு எட்டப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண்ணால் எப்படி திறமையாக பணியாற்ற முடியும்? இப்படி விசாரணையை தாமதப்படுத்துவது என்பது கடமை தவறிய செயல் மற்றும் குற்றமாகவும் கருதப்பட வேண்டும். மேலும் மூன்றாவது குழு அமைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுகிறேன் என்றார் நீதிபதி.

பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான சட்டத்தைப் பின்பற்றி, புதிய குழுவை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும். அந்த நான்காவது குழு ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அதன் அறிக்கை கிடைத்தவுடன் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தால், சம்பந்தப்பட்டவர் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கையை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு துறைகள் மற்றும் பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சமீப காலங்களில் அதிகம் காணப்படுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share