கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா?: கடுப்பான நீதிபதிகள்!

Published On:

| By Balaji

சட்டவிரோதமாக விற்கப்படுகிறது என்பதற்காக கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பனை செய்வீர்களா என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து எனும் ஊரில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, உசிலம்பட்டியைச் சேர்ந்த கலாவதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று(டிசம்பர் 2) நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊர் மக்கள் விரும்பாதபோது அங்கு ஏன் மதுக் கடையைத் திறக்கிறீர்கள்? என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.

அரசு தரப்பில், சட்ட விரோதமான மது விற்பனை, போலி மதுபான விற்பனை ஆகியவற்றை தடுக்க அப்பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க முடிவு செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.  

இதை கேட்ட நீதிபதிகள், அப்படியெனில் கஞ்சா உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது என்பதற்காக அதையும் சட்டரீதியாக விற்க நடவடிக்கை எடுப்பீர்களா? என்று கேள்வி கேட்டனர்.

அதேசமயம் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட்டால் அண்டை மாநிலங்களுக்கு சென்று மது வாங்கவும். இந்தியாவிலேயே மது தடை செய்யப்பட்டாலும் வெளிநாடுகளுக்கு சென்று மது வாங்கவும் குடிமகன்கள் தயாராக இருக்கின்றனர் என்று கூறிய நீதிபதிகள், மதுக்கடை திறக்கப்பட்டாலும் மக்கள் கட்டுப்பாட்டுடன் அங்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறினார்.

கல்லூத்து கிராம மக்களின் மனுவை பரிசீலித்து, அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடை அமைப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கான அறிக்கையை டிசம்பர் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share