~மணிகண்டன் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவு!

public

காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மணிகண்டனின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தாக்கியதால்தான் மணிகண்டன் உயிரிழந்தார் என்று உறவினர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், போலீசார் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் . சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ், நாம் தமிழர் சீமான், பாஜக அண்ணாமலை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆனைசேரியைச் சேர்ந்த ராமலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், எனது கணவர் மாற்றுத்திறனாளி. எனக்கு நான்கு மகன்கள் உள்ளன. மூத்த மகன் மணிகண்டன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரியில் இளநிலை படிப்பு பயின்று வந்தார். கடந்த 4ஆம் தேதி மணிகண்டன் அவரது நண்பர்களோடு சேர்ந்து உரங்களை வாங்குவதற்காக சென்ற நிலையில், கீழத்தூவல் காளி கோவில் அருகே காவலர்கள் லட்சுமணன் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். மணிகண்டன் வாகனத்தை நிறுத்தாமல் செல்லவே, அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர் 

பின்னர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு வந்து மகனை அழைத்துச் செல்லுமாறு காவல் நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. காவல் நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர்கள் லட்சுமி மற்றும் கற்பகம் ஆகியோர் மணிகண்டனை விரைவாக அழைத்துச் செல்லுமாறு அவசரப்படுத்தினார். அதோடு எனது மகனை புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். மகனை வீட்டிற்கு அழைத்து சென்ற போது உடல் முழுவதும் வலி இருப்பதாகவும், காவல்துறையினர் பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்தார். மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக மகனிடம் தெரிவித்திருந்த நிலையில், அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது உடல் உடற்கூராய்விற்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனது மகனின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. காவல்துறையினர் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதே மகனின் இறப்பிற்கு காரணம். மகனின் உடலை மறுஉடற்கூறு ஆய்வு செய்யும் பட்சத்திலேயே இறப்பிற்கான காரணம் தெரியவரும். ஆகவே மகனின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்யவும், முதுநிலை காவல்துறையினர் மூலம் இந்த வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று(டிசம்பர் 7) நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதன் காரணமாகவே மணிகண்டன் உயிரிழந்துள்ளார். மூன்று மணி நேரம் விசாரணை நடந்துள்ள நிலையில், காவல் துறைத் தரப்பில் வெளியிடப்பட்ட சிசிடிவி பதிவு 2 நிமிடம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்ற நீதிபதி, மணிகண்டனின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மறு உடற்கூறாய்வு செய்யவும், அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி மறு உடற்கூராய்வு செய்தவுடன் உடலை பெற்றுக் கொள்ள மனுதாரர் உறுதி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் உடலை இடுகாட்டிற்கு கொண்டு செல்லும் வரை காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *