yகோயில் சொத்துகளுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு!

Published On:

| By Balaji

கோயில் சொத்துகளுக்கும், சிலைகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பழனி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1863ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணி 60 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். இந்த நிலம் தாராபுரம் தாலுகாவில் பெரிய குமாரபாளையம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்ய ஸ்ரீரங்க கவுண்டர், ராமசாமி கவுண்டர் ஆகிய இருவருக்கும் வாடகைக்கு விடப்பட்டது. 1960ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

அப்போது இந்த நிலத்தின் மீதான பட்டா தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஸ்ரீரங்க கவுண்டரும், ராமசாமி கவுண்டரும், இது கோயில் சொத்து என்று கோவில் நிர்வாக அலுவலரும் ஈரோடு நீதிமன்றத்தில் முறையிட்டனர்

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலத்தின் மீது பழனி பாலதண்டாயுதபாணி கோயில் தேவஸ்தானத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும், ஸ்ரீரங்க கவுண்டர் மற்றும் ராமசாமி கவுண்டர் ஆகியோருக்கு உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தது.

தொடர்ந்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து ஸ்ரீரங்க கவுண்டரும், ராமசாமி கவுண்டரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், கோயில் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமிக்கும், அதன் சிலைகளுக்கும், சொத்துகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நிலத்தைக் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, பொதுவாக குழந்தைகளுக்கு நீதிமன்றமே பாதுகாவலர் எனச் சட்டம் உள்ளது. அதுபோல கர்ப்பகிரகத்தில் உள்ள சாமியை பக்தர்கள் குழந்தையாகவே பார்க்கின்றனர். அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்கின்றனர். அதன் அடிப்படையில் கோயில் சொத்துகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு என்று தெரிவித்தார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share