தமிழ்நாட்டில் முக்கிய நிபந்தனையுடன் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு, சேவல் சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால், அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், உத்தமபாளையம் பகுதியில் உள்ள தாமஸ் நகரில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை நடத்த உள்ளோம். அரசு பிறப்பித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறி முறைகளின்படி அனைத்துவித முன்னேற்பாடுகளுடன் சேவல் சண்டையை நடத்துவோம். வருகிற 16 ஆம் தேதி இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தோம். நீதிமன்றம் உத்தரவு இருந்தால் மட்டுமே சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். எனவே எங்கள் பகுதியில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று(ஜனவரி 7) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, சேவல் சண்டையின்போது சேவலின் கால்களில் பிளேடு, கத்தி உள்ளிட்டவை கட்டக்கூடாது. சேவல் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்தக்கூடாது உள்ளிட்ட நிபந்தனையுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் வருகிற 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், மறுநாள் 17 ஆம் தேதி சேவல் சண்டை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
**-வினிதா**
�,