சிறுமியின் ஆறு மாத கருவை கலைக்க அனுமதி!

Published On:

| By Balaji

மதுரையில் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பம் அடைந்த 17 வயது சிறுமியின் ஆறு மாத கருவைக் கலைக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 17 வயது மகளின் வயிற்றில் வளர்ந்து வரும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், மனுதாரரின் 17 வயது மகள் தினமும் மினி பேருந்தில் பயணம் செய்தபோது அந்தப் பேருந்தின் ஓட்டுநர் தங்கபாண்டி (44) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கருவுற்ற சிறுமிக்கு தற்போது 6 மாதம் ஆகிறது. தங்கபாண்டி மீது வாடிப்பட்டி போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கலாம், கருவைக் கலைப்பதால் சிறுமியின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், மனுதாரரின் மகளின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணையை வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் விரைவில் முடித்து நீதிமன்றத்தில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். தடய அறிவியல் சோதனை மூலம் கர்ப்பத்துக்கு காரணமானவரை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share