`தொடர் மழை: உப்பு உற்பத்தி நிறுத்தம்!

Published On:

| By Balaji

தொடர் மழை எதிரொலியாக தஞ்சை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தம்பிக்கோட்டை மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 2,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது.

சாப்பாடு உப்பு, கெமிக்கல் உப்பு என வெவ்வேறு ரக உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக உப்பள பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சேமித்து வைத்துள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர். இந்தப் பகுதியில் வழக்கமாக அக்டோபர் மாத கடைசியில் உப்பு உற்பத்தி நிறைவடையும்.

ஆனால், தற்போது தொடர் மழை எதிரொலியாக இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணிகள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதுபற்றி உப்பள தொழிலாளர்கள், வாரப்பட்ட உப்பை மட்டும் பாதுகாத்து வருகிறோம். மேற்கொண்டு உப்பு உற்பத்தி பணிகளைத் தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கும்போது தான் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கும்” என்றனர்.

இந்த நிலையில் இன்று (அக்டோபர் 22) தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

**-ராஜ்**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share