இரண்டாண்டுகளுக்குப் பிறகு அதிகரிக்கும் நெகமம் காட்டன் சேலை விற்பனை!

Published On:

| By admin

இரண்டாண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு, கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் நெகமம் காட்டன் சேலை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலையில் பட்டு, பேன்சி, காட்டன், ஜர்தோசி என எத்தனை ரகங்கள் இருந்தாலும் சின்ன சின்ன இழைகளைக் கொண்டு நளினமாக நெய்யப்படும் கைத்தறி காட்டன் சேலைகள் என்றால் பெண்களுக்கு கொள்ளை பிரியம். இதனால் நெகமம் காட்டன் சேலைக்கு தனி மவுசு உண்டு.
ஆறு கெஜம், எட்டு கெஜம் நூல் சேலை என்றாலே தமிழகத்தில் நெகமம், சின்னாளப்பட்டி ஊர்கள்தான் நினைவுக்கு வரும். மற்ற ஊர்களில் நூல் சேலை நெசவு நின்றுவிட்டாலும், நெகமத்தில் இப்போதும் 300-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெகமம், காட்டம்பட்டி, வீதம்பட்டி, குள்ளக்கா பாளையம், காணியாலாம் பாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன் பாளையம், தாசநாயக்கன் பாளையம், வதம்பச்சேரி ஜக்கார் பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சேலை நெசவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் நூல் சேலைகள்தான் சவுத் காட்டன் என்றும், கோவை காட்டன் என்றும் உலகமெங்கும் விற்பனை ஆகி வருகிறது. இந்த ரகங்கள் குறைந்தபட்ச விலையாக ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதாலும், கேரளாவில் சித்திரை விசு பண்டிகை என்பதாலும் நெகமம் காட்டன் சேலை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள காட்டன் சேலை உற்பத்தி செய்து வரும் நெசவாளர்கள், “நெகமம் காட்டன் நூல் சேலைக்கு வயது 200 தாண்டினாலும் அதன் மவுசு குறையவில்லை. அதிகரித்துதான் வருகிறது. அதுபோன்று தற்போது காட்டனில் சுடிதாரும் உற்பத்தி செய்து வருகிறோம்.
தற்போது ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, கொல்கத்தா, கேரளாவில் அதிகளவில் விற்பனை ஆகி வருகிறது. ஒரு சேலை தயாரிக்க ஒரு குடும்பத்துக்கு ஒன்றரை நாள் ஆகும். ஒரு குடும்பத்தினர் ஒரு மாதத்துக்கு 18 சேலை வீதம் 12 மாதங்கள் சேர்ந்து 216 சேலைகள் உற்பத்தி செய்தாலும் விற்பனை ஆகிவிடும்.
கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வருவதால் பலர் காட்டன் சேலையை விரும்பி அணிகிறார்கள். இதனால் அதன் தேவை இன்னும் அதிகரித்து வருகிறது. எனவே கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளனர்.

**- ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share