உயரும் பருத்தி விலை: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

Published On:

| By Balaji

அருப்புக்கோட்டையில் பருத்தி குவிண்டால் ரூ.9,500-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோபாலபுரம், புளியம்பட்டி, பாலவனத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் சோளம், கம்பு, பருத்தி, உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் சோளம் அதிகமாக பயிரிடப்பட்டு வரும் நிலையில் இந்த முறை பெரும்பாலான பகுதிகளில் பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். கடந்த காலங்களில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.5,000 முதல் அதிகபட்சமாக ரூ.6,000 வரை விலை போனது.

தொடர் மழையின் காரணமாக பருத்தி விளைச்சலும் சற்று குறைவாகவே இருந்தது. இதனால் இந்த ஆண்டு செலவழித்த தொகையைத் திரும்ப எடுக்க முடியுமா என விவசாயிகள் கவலையுடன் இருந்தனர்.

இந்த நிலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு குவிண்டால் பருத்தி ரூ.9,000 முதல் ரூ.9,500 வரை விலை போகிறது.

இதுகுறித்து பேசியுள்ள பாளையம்பட்டியைச் சேர்ந்த பருத்தி மொத்த வியாபாரி ஒருவர், ஆந்திரா பகுதிகளில் இந்த ஆண்டு பருத்தி போதிய விளைச்சல் இல்லாததால் வியாபாரிகள் அருப்புக்கோட்டையை நோக்கி வருகின்றனர். அதனால் தற்போது பருத்தியின் விலை எதிர்ப்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது.

உரத்தட்டுப்பாடு, பூச்சிக்கொல்லி விலை உயர்வு, மழையால் சேதம் எனப் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பருத்தியை அறுவடை செய்த விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்க்கும் வகையில் இந்த விலை உயர்ந்துள்ளது. இதனால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

**-ராஜ்**

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share