போதிய அளவு தண்ணீர்: பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி!

Published On:

| By admin

விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் நீர்நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சுந்தரபாண்டியம், கோட்டையூர், இலந்தைகுளம், தம்பிபட்டி, வத்திராயிருப்பு, சேஷபுரம், வ.மீனாட்சிபுரம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கிணறுகளில் தண்ணீர் போதிய அளவு இருப்பதால் விவசாயிகள் பருத்தி செடியில் களை மற்றும் உரமிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், “வத்திராயிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக கண்மாய்கள், நீர்நிலைகள், கிணறுகளில் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் இருப்பதால் கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடர்ச்சியாக பருத்தி சாகுபடி செய்து விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது பருத்தியில் களை மற்றும் உரமிடும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு போதிய மகசூல் பெற்று அதிக வருவாய் பருத்தியில் கிடைக்கும் என எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் விவசாய பணியை செய்து வருகிறோம். தற்போது வத்திராயிருப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

**-ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share