நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியல் 9ஆம் தேதி வெளியீடு!

Published On:

| By Balaji

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர், திருத்தம் செய்ய விரும்புவோருக்கான சிறப்பு முகாம்கள் நடந்து முடிந்துள்ளநிலையில்,

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வருகிற 9ஆம் தேதி வெளியிடப்படும் அறிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குதல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்தல், மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம், வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சாய்தள நடைமேடை அமைத்தல், முதியோர்களுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அதுபோன்ற வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை நேரலையாக கண்காணித்தல், நுண் மேற்பார்வையாளர்களை நியமனம் செய்தல், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், வாக்கு எண்ணும் மையங்களை இறுதி செய்தல், வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்களின் இருப்பை உறுதிசெய்தல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு வார்டு எண்ணிக்கையை நிர்ணயம் செய்தல் தொடர்பான வார்டு மறுவரையறை கூட்டமும் நடைபெற்றது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share