எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி மாணவர்களுக்கு விடுமுறை இல்லை!

Published On:

| By Balaji

கொரோனா எதிரொலியாகத் தமிழகத்தில் மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 14) அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரவு விடுமுறை என அறிவித்துவிட்டு தற்போது அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவித்தது பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா எதிரொலியாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர், டெல்லி, கேரளா, கர்நாடகா, பஞ்சாப் என 8 மாநிலங்களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பள்ளிகளில் நடைபெறும் முழு ஆண்டு தேர்வு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 10,11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி படிக்கும் மழலையர்களுக்கு வரும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான தென்காசி, திருப்பூர், கோவை, தேனி, நீலகிரி ஆகிய பகுதிகளில் பயிலும் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று இரவு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 14) அதனைச் செயல்படுத்த வேண்டாம் என்றும், அந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட இருப்பதால் நிறுத்தி வைக்க அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் விடுமுறை அளிக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share